வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் இன்று (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
வியட்னாம் ஜனாதிபதி இன்று மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்னாம் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.


