🔸 இந்தத் தூதுக் குழுவினர் நாளை (20) பாராளுமன்றத்திற்கு விஜயம்
இலங்கையின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அழைப்பையேற்று வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் கௌரவ நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
இந்தத் தூதுக்குழுவினர் நாளையதினம் (20) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்தக் குழுவினரின் பாராளுமன்ற விஜயத்தின் போது இலங்கை-வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறப்பினரகளைச் சந்திப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் மரமொன்றை நாட்டவுள்ளனர். இந்தக் குழுவினர் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்கள் வியட்நாம் மற்றும் இலங்கை இடையேயான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் இருதரப்பு உறவுகளை புதிய பரிமாணத்துக்குக் கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்கள் சபாநாயகரின் கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிடவிருப்பதுடன், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியைச் சுற்றிப் பார்வையிடுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வியட்நாம் தூதுக் குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் வியட்நாம் ஜனாதிபதி ஹோ சி மின் (Ho Chi Minh) அவர்களுக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கும் அஞ்சலி செலுத்தவிருப்பதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரைச் சந்தித்தல் உள்ளிட்ட மேலும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், இந்தக் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட முன்னர் தலதா மாளிகையைத் தரிசனம் செய்யவிருப்பதுடன், சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளனர்.