யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(07.04.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த 13.11.2025 நடைபெற்ற விவசாய குழுக் கூட்டம், உணவுப்பாதுகாப்பு கூட்டம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதை நோக்காக கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த செயற்பாடுகளில் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் இக் கூட்டத்தில் ஆராய்வதுடன், மாவட்ட விவசாய அபிவிருத்தியில் மாவட்ட உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் எவ்வாறான சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆராய்வதுடன், விவசாயிகள் விவசாயத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கியதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய தேவைகளை தன்னிறைவு எட்டக்கூடியதாக உள்ளமையும் மாவட்டத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகவும் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மாவட்ட விவசாயிகளுக்கான பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்குரிய ஆலோசனைகளையும், விவசாயிகளை தமது கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
தொடர்ந்து
விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த வங்கி முகாமையாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.மேலும் பாதீனிய ஒழிப்பு செயற்றிட்டத்தினை பிரதேச செயலாளர் மட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் நீரிழிவு நோயாளர்களுக்கு சிறுகுறிஞ்சா செடியினை மருந்தாக பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வருகின்ற யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் கார்த்திகேசு குலநாயகம் அவர்களால் சிறுகுறிஞ்சாவினை எவ்வாறு நீரிழிவு நோயாளர்களுக்கு மருந்தாக பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் தொடர்பிலும் Natura(Pvt) Ltd நிறுவனத்தின்
சிறுகுறிஞ்சா செடியின் கொள்வனவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திரு.எஸ்.ஜே.அரசகேசரி, திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள்,
நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.