தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த பேரணி இன்று (23) காலை 9.00 திருகோணமலை உவர்மலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இருந்து , திருகோணமலை பஸ் நிலையம் வரை செல்ல உள்ளது.
நாட்டில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் “ரட்டம எக்கட்ட” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து இம்முறை இளைஞர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சமூகத்தின் பல்வேறு வயது பிரிவினரிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதுடன், குறிப்பாக இளைஞர் தலைமுறை இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு தீங்கான நிலையை உருவாக்கும் அபாயம் காணப்படுகின்றது. அதன்படி 2026 தேசிய இளைஞர் தினம் “Say No” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படவுள்ளது.
போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் முயற்சியில் பொதுமக்களை செயற்பாட்டுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஓவியங்கள், போஸ்டர்கள், வீதி நாடகங்கள், பதாகைகள், கோஷங்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்பாற்றல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


