காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை

காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை
  • :

புத்தாண்டு அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று காலை (02) காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இடம்பெற்றது. நடமாடும் சேவைக்கு முன்னதான மன்னார் மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புலவுக்காணிகளில் அமைக்கப்பட்டுள்ள அரச கட்டடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. புலப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள அரச கட்டடங்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் அந்தக் கட்டடங்களை வேறிடங்களை அமைப்பதற்கான ஒழுங்குகள் தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். அதேவேளை மன்னார் மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக மன்னார் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன மக்கள், அரச திணைக்களங்கள் பயன்படுத்திய பல காணிகளை தமக்குரியது என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இந்தப் பிரச்சினை பொதுவாக இருப்பதாகவும் இதில் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ள விவரங்களை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்திய ஆளுநர், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளரை அழைத்து இந்தப் பிரச்சினைகள் தீர்க்கலாம் என ஆளுநர் குறிப்பிட்டார். மேலும் மன்னார் மாவட்டத்தில் லட்சக்கணக்கான கால்நடைகள் காணப்படும் நிலையில் அவற்றுக்குரிய மேய்ச்சல் தரவைகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும், குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்களில் உள்ள தாமதத்தை தவிர்ப்பதற்கு மேலதிக ஆளணிகளை தற்காலிகமாக வழங்கி அதனை முடிக்குமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் மன்னார் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]