கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் "சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் அரியாலை கிராமத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது J/94 கிராம அலுவலர் பிரிவின் இளையதம்பி வீதி, மதிப்பன்குளம் பகுதியில் 05.00 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், சிறு தானியங்கள் உற்பத்தி செய்வதற்காக வயலை சுற்றி வேலி அமைத்தல் கருத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமூக நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் குறித்த சிறப்புரையினை பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் வணக்கத்திற்குரிய மதகுரு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், நல்லூர் பிரதேச செயலாளர், பிரஜா சக்தி குழுவின் தலைவர், சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


