சமூக சக்தி (பிரஜா சக்தி) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” நிகழ்ச்சித் திட்டத்தின் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு நேற்று (02) தம்பலகாமத்தில் நடைபெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தம்பலகாமம் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட கள்ளிமேடு பகுதியில் சுமார் 1.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள விவசாய வடிகால் கால்வாய் திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார உட்பட பிரஜா சக்தி தலைவர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து கிராமிய அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூபா 25,000 மில்லியன் ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற இலக்கை அடைவதற்காக பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மொத்தமாக ரூபா 639.63 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


