One Million Volunteers திட்டத்தின் கீழ், சுமார் 1000 தன்னார்வ இளைஞர்கள் நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) பதுளை மாவட்டத்தில் பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்படும் One Million Volunteers திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (26) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இந்த இரண்டு நாட்களில், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை பழுதுபார்த்தல், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் வீதிகளை சுத்தம் செய்தல், பாதுகாப்பு மையங்களில் உள்ள மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் பாதுகாப்பு மையங்களில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
அத்துடன், ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, அண்மையில், சிலாபம் பகுதியில் சிரமதானப் பணியுடன் தொடங்கப்பட்ட One Million Volunteers திட்டத்தின் இரண்டாவது திட்டம் பதுளை மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்று கூறினார்.
மேலும், One Million Volunteers திட்டத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், volunteer.nysc.lk என்ற வலைத்தளத்தினூடாக அதற்கான பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


