திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வானது (02) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள்,வாக்குச் சீட்டுக்கள் அதற்குரிய ஆவணங்களை விநியோகிக்கும் மற்றும் பாரமெடுக்கும் நிலையமாக திருகோணமலை, அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள விபுலானந்த கல்லூரியில் 26 நிலையங்கள் செயற்படவுள்ளது.
எதிர்வரும் (05) ஆம் திகதி காலை 07.00 மணிக்கு விபுலானந்த கல்லூரிக்கு வருகை தந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு உரிய வகையில் வாக்குப் பெட்டி மற்றும் ஆவணங்களை கையளித்தலும் மறுநாள் (06) ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் பாரமெடுத்தலும் நடைபெறும்.
வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நெரஞ்சன் அவர்களினால் தெளிவூட்டப்பட்டன.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129 நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளது.