மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று முன் தினம் (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
வெருகல், வாகரை ஆகிய திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களுக்கான ஒதுக்கீடு, குச்சவெளி ,கோமரன்கடவல பிரதேச எல்லை ஒதுக்கீடு, தம்பலகாமம் பிரதேசத்தில் கல்வி வலயத்தினை ஸ்தாபிப்பதற்கான யோசனை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் முதலியார் குள நிலங்களை விடுவித்தல், திருகோணமலை கடற்கரை அபிவிருத்தி, குச்சவெளி, கும்புறுபிட்டி சுற்றுலா அபிவிருத்தி, சுன்னக்காடு பாதுகாப்புப் பகுதி மற்றும் கோமரன்கடவல வனபகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்தல், பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பளிங்கு கடற்கரையை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா தளமாக அறிவித்தல், சூரியபுரம் பகுதியில் யானைவேலி அமைத்தல், சுற்றுலா தள முயற்சியாளர்களுக்கு தொழிற்பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல், கடலரிப்பினை தடுப்பதற்கான திட்டங்கள், தேங்காய் தொடர்பான திட்டங்களை ஆரம்பித்தல், கிண்ணியாவில் தொலைத்தொடர்பு கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய்த்தாக்கங்கள் அதிகமாக ஏற்படுவதை தவிர்த்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு காணும் பொருட்டாக திருகோணமலை மாவட்டத்தில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு செய்கை பண்ணப்பட்டு கைவிடப்பட்டுள்ள 205 சிறு குளங்களில் ஐம்பதையும், கைவிடப்பட்டுள்ள அணைக்கட்டு 25 இல் ஐந்தையும் இந்த நிதியாண்டில் மறுசீரமைத்து நெற்செய்கை மேற்கொள்ளல், கோணேசர் கோவில் வளாகத்தில் எவரது ஒப்புதலும் இன்றி வீதியின் இருமருங்கிலும் கட்டப்பட்டுள்ள கடைகள், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 883 ஏக்கர் நிலம் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளமை, குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர் வழங்கும் திட்டம் இறக்கக்கண்டிக் கிராமத்தோடு நிற்கின்றது.
இதை மேலும் தாமதமின்றித் திரியாய் கிராமம் வரைக்கும் கொண்டு செல்லல், வெல்வேரி பகுதியில் அமைந்துள்ள காணிகளை மீளளித்து மீள் குடியேற்றம், திருகோணமலையில் மணல் அகழ்தல் மற்றும் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகள், துறைமுக அதிகார சபையிடமிருந்து நிலத்தை விடுவித்தல், வன பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து நிலங்களை விடுவித்தல், தொல்பொருள் திணைக்கள இடம் பற்றிய பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.