யாழில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு - 2025

யாழில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு - 2025
  • :

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (09.03.2025) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் 22 வீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எனவும், மாவட்ட நிகழ்வில் பெண்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் பங்குபற்றுவது எமது பெண்களின்வளர்ச்சியில் மேலும் வினைத்திறனாக அமையும் எனவும், இவ் மகளிர் தினமானது ஒரு நிகழ்வாக மட்டுமில்லாது பெண்களின் எதிர்கால வளர்ச்சியின் இலக்காக அமையும் எனவும் அதற்காக இந் நிகழ்வில் பங்குபற்றிய கௌரவ அமைச்சர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், ஒரு சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும், எமது மாவட்டமானது யுத்தத்தின் பின்னராக வளர்ச்சி நோக்கியதாக அமைந்துள்ளது எனவும், இதற்கு பெண்களின் பங்கு காத்திரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில், நவீன உலகிலும் பெண்களுக்கான அவலக்குரல் உள்ளது எனவும், அதனைத் தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், எமது நாட்டிற்கான அன்னியச் செலாவணியினை ஈட்டித் தருவதில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளதாகவும், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தெங்கு மற்றும் றபர் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், தாம் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துகொள்ளும் முதலாவது நிகழ்வு எனவும், தமது அரசாங்கமானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும், தமது அரசாங்கமானது வடமாகாண அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டம் மூலம் கூடியளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பெண்களின் உரிமை, சமத்துவம், வலுவூட்டுதல் என்பன பேணப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் பெண்கள் தீர்மானங்கள் எடுக்கும் நிலைக்கு வருதல் வேண்டும் எனவும், அந்த வகையில் பெண்களின் பங்களிப்பு விரிவாக்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கருணாநாதன் இளங்குமரன் அவர்களும், கௌரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா அவர்களும் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீசன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் திரு ந. சுகிர்தராஜ் அவர்களும், பாலம் செயற்றிட்ட திட்ட இணைப்பாளர் திரு எஸ். கிரிகரன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]