இலங்கைக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய 'தித்வா' புயல் அனர்த்தம் காரணமாக உயிரிழப்புக்கள், சொத்தழிவுகள்,
உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதங்களைப் போலவே, விவசாயத்துறைக்கும் பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் கடும்புயல் காரணமாக மத்திய மலைநாட்டின் கூருணர்வுமிக்க வனப்பிரதேசங்களில் 34% சதவீதமானவை அழிவடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.
குறித்த அழிவானது பிரதான 07 ஆற்றுப்படுக்கை சுற்றாடல் தொகுதிகளுக்கு அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அப்பிரதேசங்களில் மண்ணரிப்பு மற்றும் இயற்கை நீர் மூலங்கள் வற்றிப் போயுள்ளமை மோசமான இடராக அடையாளங் காணப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக முறையற்ற வகையிலான காணிப் பயன்பாட்டால் மோசமடைந்துள்ள இந்நிலைமையானது சமநிலைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, உயர் நீரேந்துப் பிரதேச முகாமைத்துவத்திற்கென வேறானதொரு அதிகாரசபையொன்றை தாபிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.
தீங்குவிளைவிக்கின்ற காலநிலைகளுக்கு தாங்குதிறனை அதிகரிப்பதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்து போகும் வகையில் குறித்த பிரதேசங்களுக்கு நீண்டகால பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் அமுல்படுத்தல் போன்றன இவ்வதிகாரசபையின் நோக்கங்களாக அமைகின்றது.
அதற்கமைய, மூன்று கட்டங்களாக அமுல்படுத்தும் திட்டத்தின் கீழ் உயர் நீரேந்து பிரதேச முகாமைத்துவ அதிகாரசபையின் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு விடயதானங்களை முறையான வகையில் அடையாளங் காண்பதற்காக தொழிநுட்ப நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கும், அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கும், உயர் நீரேந்து பிரதேச முகாமைத்துவ அதிகாரசபையைத் தாபிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


