புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்று பிரிவுகளில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி ஆகியவற்றுடன் பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக முன்வைத்து வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்;
கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்தத்தில் நேர்மறையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் தற்போதைய கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அதன்படி பரீட்சை முறை பாடத்திட்டம் திருத்தம் என்பவற்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் உள்ளக மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும் அந்தப் பாடங்களை நீக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.