உறுமய விடுவிப்புப் பத்திரத்தை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
காணி ஆணையாளர்கள், காணி தொடர்பான நிபுணத்துவத்துவமுடைய பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகள் பலருடன் தான் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், அந்த ஒவ்வொரு அதிகாரிகளும் இந்த விடுவிப்பு பத்திரத்தை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக சுட்டிக் காட்டியதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
இந்த விடுவிப்புப் பத்திரத்தில் எவ்வித நிபந்தனைகளும் இல்லை. எந்த வித நிபந்தனைகளும் இன்றி காணி தவறாகப் பயன்படுத்தப்படுதல், விற்பனை செய்தல் மற்றும் கையகப்படுத்தல் போன்றவற்றிற்கு முடியும். தற்போது உறுமய அளிப்பு சான்றிதழ்கள் 27,000 வெளியில் சென்றுள்ளன. இதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. காணி விடயம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டு,
விரைவில் இந்த அளிப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விடுவிப்பு பத்திரம் வழங்கப்படுவது அபாயகரமானது என்றும் மாற்றுமுறை ஒன்றிற்கு செல்ல முடியுமாயின் அது சிறந்தது என்றும் இது தொடர்பாக அனுபவமுள்ள அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இங்கு பிரதி அமைச்சர் விபரித்தார்.