“Clean Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் நகர வனங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் இன்று (30) முற்பகல் பேலியகொடை களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பமானது.
வரையறுக்கப்பட்ட கெபிடல் மகாராஜா கூட்டு நிறுவனத்திற்கு சொந்தமான எச்லோன் லங்கா தனியார் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் “துரு கெபகரு” திட்டத்துடன் இணைந்து இன்று (30) கழிவுகள் அற்ற தினத்திற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் இந்த திட்டத்தில் கைகோர்த்துக்கொண்டுள்ளனர்.
அதன்படி பேலியகொட நவலோக்க சுற்றுவட்டாரம் மற்றும் புதிய களனி பாளத்திற்கு இடையில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியில் மரங்கள் வளர்த்து அந்த பகுதி கண்கவர் நகர வனமாக நிறுவப்படவுள்ளது.
இந்த கன்றுகளை பாதுகாப்பதற்கு அர்பணிப்பவர்களாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பொறுப்பளிக்கப்படவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
அதன்படி பேலியகொட களனி பாளத்தின் அருகில் நடப்படும் கன்றுகளை பாதுகாக்கும் பொறுப்பும் பேலியகொட தர்மவிஜய அறநெறி பாடசாலை மாணவ மாணவியருக்கு பொறுப்பளிக்கப்படவுள்ளது.
மரம் தொடர்பிலான அனைத்து தகவல்கள் மற்றும் மரம் வளர்வதுடன் அதன் நாளாந்த நிலைமைகள் மற்றும் அர்ப்பணிப்பாளர்கள் தொடர்பிலான தகவல்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவதற்கான செயளி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் வரவேற்புரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது வெறுமனே ஒரு வேலைத்திட்டமாக அன்றி சமூக, சுற்றாடல் மற்றும் ஒழுக்க ரீதியாக நாட்டுக்குள் மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் “Clean Srilanka” வேலைத்திட்டத்தின் நோக்கத்துடன் இணைந்ததாக காணப்படுகிறது.
இதுவரையிலிருந்த பல அரசாங்கங்களும் மர நடுகை திட்டங்களை செயற்படுத்தி இருந்தாலும் அவை எந்தளவிற்கு வெற்றியளித்தது என்பது கேள்விக்குரியாகுமென தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், “Clean Srilanka” வேலைத்திட்டம் மக்கள் பங்களிப்புடன் கூடியது என்பதால் இந்த நகர வனம் வேலைத்திட்டம் எதிர்வரும் காலங்களில் நிலையான வேலைத்திட்டமாக அமையும் என சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பசுமை நகர திட்டத்துடன் இன்று நகர வனம் தொடர்பில் உலகத்தின் கவனம் திரும்பி உள்ளதென சுட்டிக்காட்டினார்.
இந்த நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்ள மக்களுக்குள் அணுகுமுறை ரீதியான மேம்பாடு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் மக்களுக்கு பொறுப்பளித்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
அதேபோல் இன்றி நிலையான சுற்றாடல் கட்டமைப்புக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நகர அபிவிருத்தி, வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்கவும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன் நகரமயமாக்கல் ஒரு புறத்தில் வாழ்க்கையை இலகுபடுத்துவதுடன், மறுபுறத்தில், பல விடயங்களை இழக்க வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடல் மாசு, நீர் மாசு, வாயு மாசு மற்றும் உலக வெப்பநிலை உயர்வடைதல் உள்ளிட்ட நகரமயமாக்கலுடன் ஏற்பட்டுள்ள பாதகமான பதில் விளைவுகளுக்கு நமது நாடு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதெனவும் அதற்கு தீர்வு தேடும்போது இவ்வாறான நகர வனங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகபாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே,கெபிடல் மகாராஜா கூட்டு நிறுவனத்தின் முன்னெடுப்பு முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சீ.வீரசேகர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ.சுகீஷ்வர, எஸ்லோன் லங்கா தனியார் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நளீன் ஜயவர்தன, PE-plus தனியார் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஷான் அமரசிங்க,கொழும்பு நகர ஆணையாளர், பேலியகொட நகர ஆணையாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளும், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் இராணுவ, பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.