நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் 'சுரகிமு லங்கா' எனும் தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வலுசக்தி விநியோகம் சுவட்டு எரிபொருட்கள் மீது குறிப்பிடத்தக்களவு தங்கியிருத்தல், எதிர்பாராத வகையிலான வரட்சி, பூகோள அரசியலின் உறுதிப்பாடற்ற நிலைமை போன்றவற்றால் அவ்வப்போது எரிபொருளட விநியோகம் தடைப்படுதல், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையின் ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால் எமது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த இக்காரணிகளால் அதிகரித்து வரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ள மேலதிக அழுத்தம், மின் பாவனையாளர்களின் முறையற்ற மின்பாவனைப் போக்குகளால் மேலும் மோசமடைந்துள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி செயலகம், வலுசக்தி அமைச்சு, இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை, க்ளீன் ஸ்ரீலங்கா செயலகம் போன்றவற்றை முதன்மையாகக் கொண்டு அனைத்து அரச நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகள், தனியார் துறை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அமுல்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


