கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது
  • :

பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த 11ஆம் திகதி கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிறுவனங்களின் நடத்தை, செயற்பாடு மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பான விடயங்களைக் கையாழும் முக்கிய சட்டமான 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாக இது அமையும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டபூர்வ நபர்களின் இறுதி நன்மை பயக்கும் உரிமையை இனங்காணுதல் என்ற எண்ணக்கருவின் ஊடாக இலங்கையின் கம்பெனிகள் சட்டத்தில் நிலவும் பல இடைவெளிகளை நிரப்புவதோடு, பணமோசடிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் செயல்முறைக்குத் தேவையான வசதிகளைத் திட்டமிடுதலும் இச்சட்டமூலத்தின் நோக்கம் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் பிரகாரம் ஒவ்வொரு நாடும் பணமோசடி செய்பவர்களிடமிருந்தும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பவர்களிடமிருந்தும் அதன் நிதி முறையைப் பாதுகாப்பதற்கு சர்தேச பரிந்துரைகளுக்கு இணங்க, நிதி நடவடிக்கைப் பணிக்குழு FATF இனால் வெளியிடப்பட்ட பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது குறித்த பரிந்துரை இல 40ஐப் பின்பற்றுதல் வேண்டும்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, சத்துரி கங்கானி, உபுல் கித்சிறி மற்றும் சுதத் பலகல்ல ஆகியோரும், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles