2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இற்கமைய, மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கினைக் குறித்துரைக்கப்பட்ட இடைவெளியொன்றினுள் தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் பூர்த்திசெய்யத் தவறினால் நாணயக் கொள்கைச் சபையானது நிதியமைச்சரினூடாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது பொதுமக்களுக்குக் கிடைப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.
மாண்புமிகு நிதியமைச்சருக்கும் மத்திய வங்கிக்குமிடையே 2023 ஒத்தோபர் 03ஆம் நாளன்று கைச்சாத்திடப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது 5 சதவீதத்தை பணவீக்க இலக்காக விதித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இன் நோக்கத்திற்காக இடைவெளியை ±2 சதவீதப் புள்ளிகளாகக் குறிப்பிடுகின்றது.