“The First Book 2025" திட்டத்தின் விருது வழங்கும் விழாவும் புத்தக வெளியீட்டு விழாவும் நேற்று (28) ஊவா மாகாண நூலக சேவைகள் சபை அரங்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யரத்ன தலைமையில் நடைபெற்றது.
ஊவா மாகாணப்பாடசாலை மாணவர்களின் படைப்பாற்றல் திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், ஊவா மாகாண நூலக சேவைகள் சபையும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. இதில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கவிதை, நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், திகில் கதைகள், அறிவியல் புனைகதை மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் தங்கள் படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்திய பல மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 830 படைப்பாளர்களின் 816 படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அந்தப் படைப்புகளிலிருந்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள 53 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, Clean Sri Lanka திட்டத்தின் முழுமையான ஈடுபாட்டுடன் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதே இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.


