வறுமை என்று கூறுகின்ற போது பொருளாதார ரீதியான வறுமையை மட்டும் கருதாமல், பன்முக வறுமையை ஒழிக்கும் செயற்றிட்டமாக "சமூக சக்தி" செயற்றிட்டம் அமைந்துள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தின் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (02.06.2026) நடைபெற்ற மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்,அவர் தெரிவிக்கையில், அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக சமூக சக்தி வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தினுடைய அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் மாவட்ட நிகழ்வு இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மகிழ்வான விடயம் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு கிராமத்தினுடைய வறுமையை ஒழிப்பதற்கு ஒரு அத்திவாரமாக இந்த நிகழ்ச்சி திட்டம் அமைந்துள்ளது எனவும், குறிப்பாக கிராமத்தின் வறுமையை நீக்குகின்ற போது அது பிரதேசத்தின் வறுமையை மற்றும் மாவட்டத்தினுடைய வறுமையை நீக்கி அது தேசிய ரீதியாக வறுமை ஒழிக்கும் வகையில் அரசாங்கத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், நாம் வறுமை என்று சொல்லுகின்ற போது பொருளாதார ரீதியான வறுமையை மட்டும் கருதாமல் பன்முக வறுமையை ஒழிக்கும் செயற்றிட்டமாக இந்த சமூக சக்தி செயற்றிட்டம் அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலுள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அதாவது கல்வி, சுகாதாரம், உணவு, உறையுள் போன்றவற்றில் செல்வாக்கு செலுத்தும் அனைத்து நிலையான வறுமைகளையும் பூரணப்படுத்துகின்ற போது தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றது எனவும், சில இடங்களில் கல்வி சார்ந்த வறுமை உள்ளது எனவும்,
பல்வேறுபட்ட பிரதேசங்களில், கிராமங்களில் பிள்ளைகள் தமது கல்விக்கான தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறுபட்ட இடர்களை எதிர்கொள்கின்றனர் எனவும், அதேபோல் சுகாதார தேவைகளை வழங்குகின்ற போது சில கிராமங்களில் சுகாதார சேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது எனவும், இவர்கள் சுகாதார ரீதியான வறுமைக்குட்பட்டவர்களாக காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு உணவு தொடர்பான வறுமையை ஒழிக்கும் வகையில் இந்த காளான் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும், ஒரு குடும்பம் பொருளாதார ரீதியான வறுமையில் இருந்து மீள வேண்டும் எனவும், அதன் ஒரு கட்டமாக உணவு உற்பத்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மானிப்பாய் கிழக்கு கிராமத்தில் முதற் கட்டமாக 10 பேருக்கு காளான் வளர்ப்பு உதவி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காளான் வளர்ப்புத் திட்டமானது இந்த கிராம மக்களின் முன்மொழிவுக்கு அமைவாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமூகமாக சமூக சக்தி செயற்திட்டத்தில் ஒன்றிணையும் போது அக்கிராமத்தின் வளர்ச்சி நிச்சயமானதாகக் காணப்படும் எனவும், இந்த சமூக சக்தி செயற்றிட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்படும் போது அது மாவட்டத்தினுடைய வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான பல திட்டங்களை முன்னெடுக்கும் போது அது வறுமையை முற்றாக ஒழிக்க முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


