அரசாங்கத்தின் காணிகளை அனுமதியின்றி பிடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை வழங்கும் போது, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களினால் முறைகேடாகக் கைப்பற்றப்படுகின்றமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகன பண்டார முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை வெளியிட்டார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து காணி ஆணைக்கழுவுக்கு சொந்தமான காணி எந்த அடிப்படையின் கீழ் எந்த நபர்களுக்கு இந்த காணிகள் வழங்கப்பட்டன என்பது தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காணி வழங்கப்படும் மூன்று மாத காலத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விசாரணை நடவடிக்கைகள் பாரிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட காணிகளுக்கு மாத்திரம் இடம்பெறும் என்றும் காணி ஆணைக்குழு சாதாரண மக்களுக்கு வழங்கிய திட்டங்கள் விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.